Tuesday 1 July 2014

`கசந்த’ வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?

 


 
பெண்களில் பலருக்கும் மனச்சுமையாக இருந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம், அவர்களின் சொல்லிக் கொள்ள முடியாத கடந்த கால வாழ்க்கை. திருமணமானதும் தங்களின் அந்த கசந்த காலத்தை கணவரிடம் கூறலாமா, வேண்டாமா என தங்களுக்குள் பெரிய அளவில் மனப்போராட்டமே நடத்துவார்கள்.
`சொன்னால் ஒன்றும் தப்பில்லை’ என நட்பு வட்டத்திலும், `சொல்லிவிடாதே, உன் வாழ்க்கையை நீயே ஏன் கேள்விக்குறியாக்கிக் கொள்ள வேண்டும்?’ என்று உறவினர்களும் சொல்லி பயமுறத்துவார்கள். இந்தநிலையில் ஒரு தெளிவான முடிவு தெரியாமல் பெண்கள் ஒரு குற்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கலாம். அவர்களுக்கு சரியான ஆலோசனை கூற அருகில் யாரும் இல்லாத நிலையில் யார்மூலமாகவோ இவர்களின் கடந்த காலம் கணவருக்கு சொல்லப்பட்டு, அப்போது ஏற்படும் பூகம்பத்தில் எதிர்காலமும் சேர்ந்து ஆட்டம் கண்டுவிடும் அபாயம் உண்டு.
ஆண்களின் கடந்த காலத்தை பெண்கள் சுமைதாங்கிகளாக தாங்கிக் கொள்கிறார்கள். அதன் சுவடு சிறிதும் தெரியாமல் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் மனப்பக்குவம் இந்திய பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது கேள்விக்குறியே. காரணம் நம்முடைய சமூக அமைப்பு.
ஆண் கடந்த காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பது போல, பெண் தன்னுடைய கடந்த காலத்தை ஆணிடம் வெளிப்படுத்த தயங்குகிறாள். நம்முடைய சமுதாய அமைப்பில் ஆண்கள் பல திருமணங்களை செய்து கொள்கிறார்கள். அவர்களின் மதிப்பு குறைவதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. ஒருமுறை அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டால் வாழ்நாள் முழுமைக்கும் அவர்கள் அந்த திருமண பந்தத்துடன் கட்டுண்டு கிடக்க வேண்டும். இது தான் நம் குடும்ப கட்டமைப்பின் காலம்காலமான நியதி!
பெண்ணானவள் எப்போதுமே குடும்பத்தின் கவுரவமாக, எதிர்காலமாக கருதப்பட்டாள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தான். இன்று முன்னேறிய சமூகத்தில் திருமணம் பல மாற்றங்களுக்குஉட்பட்டிருக்கிறது. பெண்கள் தயக்கமின்றி மறுமணம் செய்து கொள்கிறார்கள். இழந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் கடந்த காலம் எனும் திரையை மட்டும் விலக்க தயங்கும் சூழ்நிலை இன்றும் இருந்து வருகிறது. காரணம் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம்தான்.
பெண்கள் நம்மைப் போல உயிரும் உணர்வும் உள்ள ஜீவன்கள் என்பதை ஆண்கள் ஏற்றுக் கொள்ளவே பலகாலம் பிடித்தது. ஒருவனை திருமணம் செய்து கொண்டு, ஒருவனுக்காக வாழ்ந்து, அவன் இறந்ததும் அவனுடன் உடன்கட்டை ஏறும் கொடூர வழக்கம் நம் இந்தியாவில் இருந்தது. இதனை ஒரு புனிதமான, தெய்வீக வழக்கம் என்று கூறிக்கொண்டு பெண்களை உயிருடன் நெருப்புக்குத் தாரைவார்க்கும் மனிதர்கள், பெண்களின் கடந்த காதல் காலத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
பெண்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்ககூடாது. இருந்தால் அது பாவம். ஆசைகள் இருந்தால் அது துரோகம். யாரையாவது காதலித்தால் அது சமூக குற்றம் என்பது போன்ற மனநிலை ஆண்கள் மனதில் வேறூன்றி விட்ட நிலையில், அவர்களுடைய கடந்த காலத்தை திரை போட்டு மறைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். ஆனால் இந்த நிலை மாற வேண்டும். அப்படி மாறினால் அது பெரிய சமூக மாற்றமாக அமையும்.
ஆண்கள் தன்னைப் போலவே பெண்களும் உயிருள்ள பிரஜைகள் என்பதை கருத்தில் கொண்டாலே போதுமானது. அவர்கள் கடந்த காலத்தை பரந்த மனதுடன் உற்று நோக்கி அவர்களுடைய நேர்மையான மனதை அஸ்திவாரமாக கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். ஏனென்றால் கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது. அது ஒளிமயமாக மாற வேண்டுமானால்
கடந்த கால அவலங்களை தூக்கிப் போட வேண்டும். அதற்கு உயர்ந்த உள்ளம் தேவை. இது ஒவ்வொரு ஆணிடமும் இருக்க வேண்டும். இருந்தால் அது அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்கும்.

No comments:

Post a Comment